ஹிட்லரின் படைகள் போல் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது.. குமாரசாமி அச்சம்..
ராமர்கோயில் கட்டுவதற்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளப்படுத்தப்படுகிறது, ஹிட்லரின் நாஜி படைகள் போல் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது என்று குமாரசாமி அச்சம் தெரிவித்துள்ளார்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக சில பதிவுகளைப் போட்டுள்ளார்.
அதில் அவர், ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வசூலிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர், நிதி அளித்தவர்களின் வீடுகளைக் குறியீடு செய்து விட்டு செல்கின்றனர். அதாவது, நன்கொடை தராதவர்களின் வீடுகளை அடையாளப்படுத்துகின்றனர். இது ஹிட்லரின் நாஜி படைகளின் செயல்பாட்டைப் போல் இருக்கிறது. அந்த படைகளால் பல லட்சம் போர் மரணித்தார்கள். ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி படைகள் தோன்றிய அதே காலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தோன்றியது என நினைக்கிறேன்.
இப்போது நாட்டில் யாரும் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வருங்காலங்களில் அரசாங்க கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் வகையில் ஊடகங்கள் மாறி விடுமோ என்று எனக்குத் தெரியாது. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் சாமான்ய மனிதர்களின் நிலை என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.இது பற்றி ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் இ.எஸ்.பிரதீப் கூறுகையில், குமாரசாமி கூறுவது போல் எதுவும் நடக்கவில்லை என்று மறுத்தார்.