ஆபரஷேன் லோட்டஸ்.. புதுச்சேரியில் ஆரம்பம்.. நாராயணசாமி பேட்டி..
புதுச்சேரியில் ஆபரேஷன் லோட்டஸ் வேலையை பாஜக ஆரம்பித்து விட்டது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரியில் கடந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது முதல்வராகக் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென டெல்லியில் இருந்து திரும்பி வந்த நாராயணசாமி முதல்வர் ஆக்கப்பட்டார். நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சரனார். அது முதல் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்தைச் சமீபத்தில் பா.ஜ.க. தன்பக்கம் இழுத்தது. அவருடன் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏவும் பாஜகவுக்கு தாவினார். இருவரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜ.க-வில் இணைந்தனர்.
இதன்பின், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆகியோரும் பதவி விலகினர். இதனால், நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. மொத்தம் உள்ள 28 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரஸ்திமுக கூட்டணியில் 14 பேரும், எதிர்க்கட்சி அணியில் 14 பேரும் உள்ளனர். இதற்கிடையே, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாக தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாராயணசாமி கூறியதாவது:ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவுக்கு தொல்லை கொடுத்து வந்தார். மல்லாடி கிருஷ்ணாராவ் தனது தொகுதிப் பிரச்சனைக்காகக் கொடுத்த கோரிக்கைகளை கிரண்பேடி நிராகரித்தார். கடந்த 4 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணாராவுக்காக நான் போராடி வந்தேன். ஆளுநரை நீக்குமாறு ஜனாதிபதியைச் சந்தித்து புகார் கொடுத்தோம். எதிர்க்கட்சிகளும் எங்களைச் செயல்பட விடாமல் தடுத்து வந்தனர். நான்கு ஆண்டுகளாகக் கடுமையாக போராடினோம். இப்போது, ஆபரேஷன் லோட்டஸ் வேலையைப் புதுச்சேரியிலும் பாஜக ஆரம்பித்து விட்டது. ஆட்சியைக் கவிழ்த்து பாஜக என்ன செய்தாலும் நாங்கள் மக்களுக்கு நல்லது செய்திருக்கிறோம் என்பதை மக்கள் உணர்வார்கள்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.