கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்பவர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா நோயாளி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டார். கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவிலுள்ள வுஹானில் இருந்து கேரள வந்த ஒரு எம்பிபிஎஸ் மாணவருக்கு இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நோய் அதிகமாகப் பரவிய போது கேரளாவில் மட்டும் நோய் பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மற்ற பெரும்பாலான மாநிலங்களில் நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. இதுவரை இந்த மாநிலத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டி விட்டது.

தற்போதும் 60,500க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதித்து மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மத்திய சுகாதாரத் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கேரள அரசிடம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய சுகாதாரக் குழு கேரளாவுக்கு பல முறை நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியது. இந்நிலையில் கேரளாவில் நோய் பரவி வருவதால் அங்கிருந்து வருபவர்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சமீபத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. இதேபோல தற்போது கர்நாடக மாநில அரசும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே ஓட்டல்கள் லாட்ஜ்கள் ஆகியவற்றில் அனுமதிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

More News >>