நடிகை பலாத்கார வழக்கு பிரபல நடிகரின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா?

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனு மீது கொச்சி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு இரவில் காரில் செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பலாத்கார சம்பவத்திற்கு மலையாள முன்னணி நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் என தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சாட்சிகளை மிரட்டவோ, தனக்குச் சாதகமாகவோ பயன்படுத்தக் கூடாது, அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் நடிகர் திலீப் சில சாட்சிகளை மிரட்டியதாகவும், தனக்குச் சாதகமாகச் சாட்சி சொல்லச் சிலரைக் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கொச்சி விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த சில வாரங்களாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் 10வது குற்றவாளியான விஷ்ணு என்பவரை அப்ரூவராக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

More News >>