சென்னையில் முதன் முறையாக இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம் அதிகபட்ச விலை பட்டியலில் 10 வீரர்கள்
ஐபிஎல் 14 வது சீசனில் கலந்து கொள்ள உள்ள வீரர்களைத் தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று முதன் முறையாகச் சென்னையில் நடைபெறுகிறது. அதிகபட்ச விலைக்கான பட்டியலில் 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் பீதியால் இந்த போட்டிகள் கடந்த வருட இறுதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு அமீரக நாடுகளில் வைத்து நடத்தப்பட்டது. இந்நிலையில் 14வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் முதல் முறையாகச் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 8 அணிகளில் மொத்தம் 196 வீரர்கள் இருந்தனர். இவர்களில் 139 பேர்கள் தக்க வைக்கப்பட்டு மீதமுள்ள 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சீசனுக்கான ஏலத்தில் பங்கேற்க விடுவிக்கப்பட்ட 57 வீரர்கள் உட்பட மொத்தம் 1,114 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருந்து 292 பேரை ஏலத்தில் கலந்து கொள்ளத் தகுதியானவர்களாக ஐபிஎல் தேர்வு செய்துள்ளது. இவர்களில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 சார்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் உள்ளனர்.
வீரர்களுக்கு அடிப்படை விலையாகக் குறைந்த பட்சம் ₹ 20 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹ 2 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலைக்குரிய பட்டியலில் 10 வீரர்கள் உள்ளனர். இவர்களில் லயம் பிளங்கெட் , சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், ஜேசன் ராய் மற்றும் மோயின் அலி ஆகிய 5 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோரும், வங்கதேசத்தைச் சேர்ந்த சாஹிப் அசன், இந்திய வீரர்களான கேதார் ஜாதவ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் உள்ளனர். அடுத்ததாக ₹ 1.5 கோடி பட்டியலில் அலெக்ஸ் கேரி, டாம் கரன், மார்னி மார்கல், டேவிட் மில்லர் உள்பட 12 விரல்களும் வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ₹ 1 கோடிக்கான பட்டியலில் உள்ள 11 வீரர்களில் உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமா விஹாரி மட்டுமே இந்திய வீரர்கள் ஆவர். இந்த பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லபுஷேன் மற்றும் பின்ச் ஆகியோரும், மேற்கிந்திய தீவை சேர்ந்த ஷெல்டன் காட்ரெல், வங்கதேசத்தை சேர்ந்த முஸ்டாபிர் ரகுமான் ஆகியோரும் உள்ளனர். இன்று மாலை 3 மணி அளவில் ஏலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.