திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடக்க இருக்கிறது. இதையொட்டி 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்திலு ம் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருவார். ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி தாயார் வீதி உலா நடப்பதால் இந்த ரத சப்தமி வைபவத்தைப் பக்தர்கள் மினி பிரம்மோற்சவம் என்றே அழைப்பது வழக்கம். அதிகாலை 5.30 மணியளவில் முதல் வாகனமாகச் சூரிய பிரபை வாகனம் உலா நடைபெற உள்ளது. காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகனம் பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகன பவனி, பிற்பகல் 1 மணி முதல் 2 மணிவரை அனுமந்த வாகன பவனி மற்றும் 2 மணி முதல் மாலை 3 மணிவரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து மாலை 4 மணி முதல் சர்வ பூபாலம், முத்து பந்தல் மற்றும் இரவு 9 மணிக்கு சந்திரப் பிரபை உள்ளிட்ட 7 வாகனங்களில் சுவாமி தாயார் நான்கு மாடவீதியில் வலம் வரும் வைபவங்கள் நடக்கிறது.ரதசப்தமி உற்சவத்தில் சுவாமி வீதியுலாவைக் காண்பதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் கல்யாண உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களும் திருமலையில் இன்று காலை முதலே வந்ததால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.