காற்று வீசியதால் கர்ப்பம் 1 மணி நேரத்தில் பிரசவம் இப்படியும் ஒரு வினோதம்
காற்று வீசிய போது, தான் கர்ப்பிணி ஆனதாகக் கூறி ஒரு இளம்பெண் மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த 1 மணி நேரத்தில் அவர் ஒரு அழகிய பெண் குழந்தையைப் பிரசவித்தார். கர்ப்பிணி ஆனது தொடர்பாக அந்த இளம்பெண் கூறிய விசித்திரமான காரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சிதி சைனா என்ற இளம் பெண் தான் காற்றால் கர்ப்பிணி ஆகி ஒரு குழந்தையைப் பிரசவித்த வினோத இளம்பெண்.
கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை அழைத்து இந்த இளம்பெண் கூறியது: நான் என்னுடைய வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தபோது திடீரென பலமாகக் காற்று வீசியது. அந்தக் காற்று என்னை கடந்து சென்ற 15 நிமிடங்களுக்குப் பின்னர் என்னுடைய வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக நான் அருகில் உள்ள சுகாதார மையத்திற்குச் சென்றேன். அங்கு என்னைப் பரிசோதித்த டாக்டர்கள் நான் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறினர். அங்குச் சென்ற ஒரு மணி நேரத்திற்குள் நான் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இளம்பெண் சிதி சைனாவின் இந்த விசித்திரமான பேச்சு சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து அறிந்த அப்பகுதியினர் சிதியின் வீட்டுக்குப் படையெடுத்தனர். சுகாதாரத் துறை ஊழியர்களும் சிதியைச் சந்தித்து விவரத்தைக் கேட்டனர். அவர்களிடமும் அந்த இளம்பெண் அதேபோலத் தான் காற்றால் கர்ப்பிணி ஆனதாகக் கூறினார். ஆனால் சுகாதாரத் துறை ஊழியர்கள் சிதி கூறுவதை நம்பத் தயாராக இல்லை. இது குறித்து ஜகார்த்தாவைச் சேர்ந்த ஒரு சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறுகையில், பிரசவிக்கச் செல்வதற்கு முன்பு வரை அபூர்வமாக சில பெண்கள் தங்கள் கர்ப்பிணி என்பதே தெரியாமல் இருப்பார்கள். இந்த நிலைக்கு கிரிப்டிக் பிரக்னன்சி என்று கூறப்படுகிறது. அந்த நிலையில் தான் சிதி சைனாவும் இருந்திருப்பார். அது தான் காரணமாகும். இதுபோன்ற முட்டாள்தனமான விஷயங்களை ஊக்குவிக்கக் கூடாது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.