யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ₹16.25 கோடிக்கு ஏலம்
ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கின் ₹ 16 கோடி என்ற தொகையை தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் முறியடித்துள்ளார். இவரை ₹ 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்தமாக்கி உள்ளது.14வது சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் 164 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 292 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். 8 அணிகளில் அதிகபட்சமாக 60 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு அணிகளை சேர்ந்த 22 பேருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏலத்திற்கு முன்னோடியாக 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 139 வீரர்களை தக்க வைத்துக் கொண்டனர். 58 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய ஏலத்தில் இதுவரை இல்லாத தொகைக்கு தென் ஆப்பிரிக்க வீரரான கிரிஸ் மோரிஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இதுவரை யுவராஜ் சிங் தான் சாதனை படைத்திருந்தார். அவரை கடந்த 2015ல் டெல்லி அணி 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இப்போது அந்த சாதனையை கிறிஸ் மோரிஸ் முறியடித்துள்ளார். இவரை 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்தமாக்கி உள்ளது. இவரை ஏலத்தில் எடுப்பதற்கு ராஜஸ்தான் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி கடுமையாக போட்டி போட்டது. இறுதியில் ராஜஸ்தான் அணி மோரிசை ஏலத்தில் எடுத்தது.
கடந்த முறை கிறிஸ் மோரிஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்தார். அவரை பெங்களூர் அணி இம்முறை விடுவித்தது.மும்பை வீரரான சிவம் துபே தான் இந்த வருடத்தின் ஏலத்தில் முதல் இந்திய கோடீஸ்வரன் ஆவார். பெங்களூர் அணி விடுவித்த இவரை ₹ 4.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி சொந்தமாக்கியது. இதற்கிடையே மோசமான ஆட்டத்தின் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்த மேக்ஸ்வெல்லை ₹ 14.25 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. இவரை ஏலத்தில் எடுப்பதற்கு பெங்களூர் அணியுடன் சென்னை அணி கடுமையாக போட்டி போட்டது. இறுதியில் பெங்களூர் அணி மேக்ஸ்வெல்லை ₹ 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் இவரை 10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான மோயின் அலியை சென்னை அணி ₹ 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசனை ₹ 3.20 கோடிக்கு கொல்கத்தாவும், ஸ்டீவ் ஸ்மித்தை ₹ 2.2 கோடிக்கு டெல்லியும் எடுத்துள்ளது. பெரிய தொகைக்கு ஏலத்தில் போவார் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வீரர் டேவிட் மலனை ₹ 1.50 கோடிக்கு பஞ்சாப் அணி சொந்தமாக்கியது. இதே சமயத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹெய்ல்ஸ், இந்திய வீரர் கருண் நாயர் ஆகியோரை முதல் கட்டத்தில் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.