காது கேட்காது: கண்ணும் தெரியாது: தத்தெடுத்த நாயை கவனிக்க ரோபோ உருவாக்கிய லக்னோ இளைஞர்!
லக்னோ: பார்வை குறைபாடு உள்ள நாய்களை கவனித்து கொள்ள ரோபோ ஒன்றை உருவாக்கி உத்தரப்பிரதேச இளைஞர் ஆச்சரியப்படுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மிலிந்த் ராஜ் என்பவர் கொரோனா ஊரடங்கின்போது படுகாயமடைந்த நாய் ஒன்றை மீட்டுள்ளார். தொடர்ந்து, ஜோஜோ என்ற பெயரிட்டு அந்த நாயை மிலிந்த் ராஜ் வளர்த்து வருகிறார். இதற்கிடையே, அந்த நாயை மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் காரணமாக நாயின் காதுகேட்கும் திறனும், பார்வைத்திறனும் பறிபோனது.
இருப்பினும், தனக்கு அதிக பணி உள்ளதால், ஜோஜோவை கவனிக்க ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ சரியான இடைவெளியில் ஜோஜோவுக்கு உணவு வழங்கும். மேலும், ஜோஜோவை ரோபோ நன்றாக கவனித்து கொள்ளும்.
இது தொடர்பாக மிலிந்த் ராஜ் கூறுகையில், கொரோனா ஊரடங்கின்போது நான் ஜோஜோவை தத்தெடுத்தேன். மனிதர்களை பார்த்தாலே பயம் கொள்கிறது. அதனால் இந்த நாய்க்காக ஒரு ரோபோவை உருவாக்கினேன். அந்த ரோபோ சரியான நேரத்தில் உணவு ஊட்டும். கவனித்துக்கொள்ளும். ஒரு உயிருக்கும், டெக்னாலஜிக்கும் இடையேயான அழகான உறவு இது என்றும் தெரிவித்தார். ரோபோ தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிகம் ஆர்வம் கொண்ட மிலிந்த் ராஜ் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமிடம் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.