டுவிட்டரில் போர்: படிப்பு குறித்து கிண்டல் செய்த பெண்ணுக்கு நடிகர் சித்தார்த் தக்க பதிலடி!
பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர் என விமர்சித்த பெண்ணுக்கு நடிகர் சித்தார்த் தக்க பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டூல்கிட்டை பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த சூழியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த், திஷா ரவி கைதுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, டூல்கிட் டை விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.
நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் நண்பர்களுடன் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் எந்த படம், எந்த நேரம், எங்கு செல்ல வேண்டும் என்று செய்தி அனுப்புகிறீர்கள். இதை டூல்கிட் என்றும் சொல்லலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
சித்தார்த்தின் இந்த ட்வீட்டை பகிர்ந்த ஐதராபாத்தைச் சேர்ந்த கருணா கோபால் என்ற பெண், யார் இந்த நபர்? பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவராக இருக்கலாம்? அவர் இயற்கையான அடிப்படை விஷயங்களையே ஆத்திரமூட்டும் வகையில் பதிவிடுகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சித்தார்த், இந்த பெண் 2009 இல் ஐ.எஸ்.பி.யில் நடந்த தனது குழுவிவாதத்தில் கலந்துகொள்ள பல மாதங்களாக எனக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார். நானும் JP_LOKSATTA உடன் அதில் பங்கேற்றேன். மேலும் நான் ஒரு முதுகலை பட்டதாரி. நான் என் மனதில் தோன்றியதைப் பேசினேன். அந்த பெண் தனது நேர்மை மற்றும் ஞாபகசக்தியை தனது முதலாளியிடம் விற்றுவிட்டார். இப்போது மோடியின் பொய்களையும் வாந்தியையும் பரப்புகிறார் என்று தெரிவித்தார்.
ஆனாலும், அந்த பெண் விடுவதாக இல்லை. உங்களுக்கு இடமளித்ததையே பெரிய தவறாக எண்ணுகிறேன். அதை நான் தெளிவாக செய்திருக்க வேண்டும் என்றும், சித்தார்த்தை தான் அழைக்கவில்லை; தன்னுடைய பள்ளியிலிருந்து யாரை அழைத்திருக்க வேண்டும் என்றும் ட்வீட் செய்தார்.
சித்தார்த்தும் அதை விடுவதாக இல்லை. என்னிடம் கோரிக்கை வைத்த நிறைய மெயில்கள் இருக்கிறது. அதை பொதுவெளியில் பகிரவேண்டுமா? டெக்னாலஜி மிகவும் அழகானது என்று கூறினார். கருணா தான் மெயில் எதுவும் அனுப்பவில்லை என மறுத்ததுடன், சித்தார்த் தொழில்முறை தெரியாத ஒரு நபர் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு சரியான பதிலடி கொடுக்கவிரும்பிய நடிகர் சித்தார்த், அந்த பெண் தன்னுடைய மகனின் ஓவிய கண்காட்சியை துவக்கிவைத்தால் அவன் சந்தோஷப்படுவான் என்று அனுப்பிய மெயியின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்தார். இது ட்வீட் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே 8 ஆயிரம் லைக்குகளைப் பெற்றதுடன், பலரும் அந்தப் பெண்ணின் பொய்யான ட்வீட்டுகளுக்கு சித்தார்த் பதிலடி கொடுத்துவிட்டதாகக் கூறி கமெண்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.