7 மாதங்கள், 30 கோடி மைல்கள் தாண்டி அமெரிக்க விண்கலம் செவ்வாயில் இறங்கியது
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் 7 மாதங்கள் மற்றும் 30 கோடி மைல்கள் தாண்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.25 மணி அளவில் செவ்வாயில் தரையிறங்கியது. நாசா விஞ்ஞானிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மர்ம கிரகமாக உள்ள செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் ஏதேனும் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்துக் கண்டறிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நீண்ட நெடுங்காலமாக கடும் ஆராய்ச்சி செய்து வருகிறது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா நான்கு விண்கலங்களை அனுப்பி உள்ளது.
இந்நிலையில் ஐந்தாவதாகச் செவ்வாய் கிரக ஆய்வுக்காக பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த வருடம் ஜூலையில் நாசா செவ்வாய்க்கு அனுப்பியது. கடந்த வருடம் ஜூலை 30ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் யுஎல்ஏ அட்லஸ் 541ல் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது . இதில் உள்ள ரோவரில் இன்ஜெனுவிட்டி என்ற சிறிய ஹெலிகாப்டரும் இணைக்கப்பட்டது. இது பூமிக்கு வெளியே வேறு கிரகத்திற்குச் செல்லும் முதல் ஹெலிகாப்டர் ஆகும். இந்த விண்கலத்திற்கான மொத்த செலவு ₹ 300 கோடி டாலர்களாகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்து அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு எடுத்து வருவதற்கு இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களில் 30 கோடி மைல்கள் தாண்டி இந்த பெர்சவரன்ஸ் விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.25 மணி மணியளவில் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இதை நாசா விண்வெளி மைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் விண்வெளியில் 12,100 மைல் (19,500 கிலோ மீட்டர்) வேகத்தில் பயணம் செய்த ரோவரை ஒரு பாராசூட்டை பயன்படுத்தி வேகத்தைக் குறைத்து செவ்வாயில் தரை இறக்கப்பட்டது. இந்த பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரை இறங்கும் 5வது விண்கலம் ஆகும். இதற்கு முன்னர் சோஜனர், ஆப்பர்சூனிட்டி, ஸ்பிரிட் கியூரியாசிட்டி ஆகிய விண்கலங்கள் ஏற்கனவே செவ்வாயில் தரையிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது நாசா விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தரை இறங்கிய உடனேயே செவ்வாய் கிரகத்தில் உள்ள சில புகைப்படங்களை இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.