ஓடிடியில் வெளியான ஒரு சில நிமிடங்களில் டெலிகிராமில் கசிந்த திரிஷ்யம் 2
நேற்று நள்ளிரவு அமேசான் பிரைமில் வெளியான மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 2 மலையாளப் படம் ஒரு சில நிமிடங்களிலேயே டெலிகிராம் செயலியிலும் வெளியானது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத் மற்றும் பலர் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் திரிஷ்யம். இந்தப் படம் மலையாளத்தில் பல வசூல் சாதனைகளை முறியடித்தது. முதன் முதலாக மலையாள சினிமா வரலாற்றில் வசூலில் ₹ 50 கோடியும், பின்னர் 100 கோடியும் தாண்டியது.
இது மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், சிங்களம், சீனா உட்பட வெளிநாட்டு மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெற்றி பெற்றது. இதற்கிடையே திரிஷ்யம் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகை மோகன்லால் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான குடும்ப திரில்லர் படங்களில் இது சிறந்த படமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் முதல் பாகம் வெளியாகி 7 வருடங்களுக்குப் பின்னர் திரிஷ்யம் 2 என்ற பெயரில் இதன் இரண்டாவது பாகம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்திலும் மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத், எஸ்தர் அனில், அன்சிபா கான் உள்பட முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர். திரிஷ்யம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதால் இதன் இரண்டாவது பாகமும் கொரோனாவுக்குப் பின்னர் தியேட்டர்களில் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தை ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று நள்ளிரவில் அமேசான் பிரைமில் திரிஷ்யம் 2 வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் பரபரப்புடன் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே டெலிகிராம் செயலியில் வெளியானது. இது இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்க இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தீர்மானித்துள்ளார்.