இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கடும் நிபந்தனைகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 75 நாட்களுக்குப் பின்னர் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியது. இதையடுத்து நிபந்தனைகளைக் கடுமையாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. தினமும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியது. நோய் பாதித்து மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பரவல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நோய் பரவல் மேலும் அதிகரித்து வருகிறது. நேற்று 5,427 பேருக்கு நோய் பரவியது. இந்த மாநிலத்தில் கடந்த 75 நாட்களுக்குப் பின்னர் நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 81 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று 38 பேர் மரணமடைந்தனர்.

இதையடுத்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,669 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் இதுவரை 11,432 பேர் கொரோனா பாதித்துப் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து நிபந்தனைகளைக் கடுமையாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக அமராவதி மற்றும் யவத்மால் மாவட்டங்களில் தான் கடந்த சில நாட்களாக நோய் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் நாளை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களில் முக கவசம் இல்லாமல் பயணம் செய்பவர்களைப் பிடிக்க 300 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. திருமணம் நடைபெறும் அரங்குகள், கிளப்புகள் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 5 பேருக்கு மேல் நோயாளிகள் உள்ள கட்டிடங்கள் சீல் செய்யப்படும். பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களைத் தனி முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

More News >>