வெற்றி நடை என்று இதற்காகத்தான் எடப்பாடி சொல்கிறாரா? ஸ்டாலின் சொன்ன விளக்கம்..

வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மத்தியிலும் மாநிலத்திலும் மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சி உள்ளது. அதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், பெட்ரோல்-டீசல்-சமையல் கேஸ் ஆகியவற்றின் தொடரும் விலை உயர்வே, பானை சோற்றுக்குப் பதச்சோறாக இருக்கின்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 400 ரூபாய் அளவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இருந்தபோது, பா.ஜ.க.வினர் காலி சிலிண்டர்களைத் தூக்கிக்கொண்டு சாலையில் இறங்கி கண்டனப் போராட்டம் நடத்தினர். இப்போது அந்த பா.ஜ.க. ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.787.50 இதுதான் இல்லத்தரசிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கியுள்ள அதிர்ச்சிப்பரிசு. தி.மு.க ஆட்சியின்போது 2011ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ63.37பைசா. டீசல் விலை ரூ.43.95 பைசா. அதற்கே அ.தி.மு.க கூப்பாடு போட்டு போராடினார்கள்.

இப்போது பழனிசாமியின் அ.தி.மு.க ஆட்சியில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.91.19 பைசா. டீசல் ரூ.84.44 பைசா. எங்கள் எஜமானரான மத்திய அரசு மக்களை வதைத்தால், அவர்களின் அடிமைகளான நாங்களும் அதைத்தானே செய்வோம் என்பதுபோல, மத்திய அரசு 20 லட்சம் ரூபாய்க்கு கலால் வரி விதித்து பெட்ரோல் விலையை உயர்த்தியது என்றால், அதன் மீது கூடுதல் சுமையாக பழனிசாமி அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.25 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.50 பைசாவும் வாட் வரி விதித்து, விலையேற்றத்திற்குத் துணை போயுள்ளது. விரைவில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடிக்கும். டீசல் விலையும் அதே அளவுக்கு உயரும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைக் கடக்கும். இதுதான் அச்சீ டின் என்ற மோடி அரசின் நல்ல நாளா? வெற்றி நடை போடும் தமிழகம் என அரசுப் பணத்தை அள்ளி இறைத்து வெற்று விளம்பரம் கொடுக்கும் அ.தி.மு.க அரசின் சாதனையா? விலையேற்றச் சுமையினால் வாகனங்களைப் பயன்படுத்த முடியாமல், மக்கள் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

இதற்காகத்தான் வெற்றி நடை என்று எகத்தாளத்துடன் கிண்டல் செய்கிறாரா முதலமைச்சர் பழனிசாமி? மத்திய பா.ஜ.க அரசும், மாநில பழனிசாமி அரசும் தி.மு.கவை பொது எதிரி என்கிறார்கள். இந்த இரண்டு ஆட்சிகளும்தான் பொதுமக்களின் எதிரிகள். தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் தோழன். அவர்களின் துயரங்களில் தோள் கொடுக்கும் இயக்கம். அதனால்தான், பெட்ரோல்-டீசல்-சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக மாவட்டத் தலைநகரங்களில் மக்கள் திரளுடன் பிப்ரவரி 22ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடைபெற இருக்கிறது. இது அனைத்து மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகிற போராட்டமாக அமையட்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பெருமளவு குறைந்தாலும், கலால் வரிவிதிப்பு எனும் நுகத்தடியால் மத்திய அரசும், வாட் வரி எனும் சாட்டையால் மாநில அரசும், மக்களை மாடுகளைப் போல நினைத்து வதைக்கும் கொடுமையை எதிர்த்துக் களம் காண்போம். வரிகளை ரத்து செய்து, விலை குறைத்திட வழி வகுப்போம்.

நமது இலக்கு 200 தொகுதி என்கிற இலட்சியத்தை உங்களை நம்பி அறிவித்தேன். அது 234 தொகுதிகளாகவும் அமையப்போகிறது என்கிற வகையில் எழுச்சியைக் காண்கிறேன். தி.மு.க வெற்றியைத் தட்டிப்பறித்திட, அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைத்துவித நூதன மோசடிகளிலும் மனசாட்சியின்றி ஈடுபடுவார்கள். அவர்களின் கொட்டமடக்கிட, நம் ஜனநாயக அறவழிப் போர்ப்படை ஆயத்தமாக இருக்க வேண்டும்; மிகுந்த கவனத்துடன் காரியம் ஆற்ற வேண்டும். அந்த ஆயத்தப் பணிகளுக்கான பாசறையாக-பாடி வீடாக- தீரர் கோட்டமாம் திருச்சியிலே திமுகவின் 11வது மாநில மாநாடு மார்ச் 14ம் நாள் மகத்தான முறையிலே நடைபெறவிருக்கிறது. தலைவர் கலைஞரும் இனமானப் பேராசிரியரும் இல்லாத முதல் மாநில மாநாடு என்கிற சுவடே தெரியாமல், அவர்களின் அடியொற்றிப் பயணிப்போம். 11ஆம் மாநில மாநாட்டை மகத்தான வெற்றி பெறச் செய்வோம். அதில் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்தி, தலைவர் கலைஞரின் அரசை விரைவில் தமிழகம் காண ஆயத்தமாவோம். மலைக்கோட்டை மாநகரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டின் வெற்றியை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கச் செய்திடுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

More News >>