கடலூரை அதிரவைத்த இரவு ரவுடி தலை துண்டித்து கொலை இன்னொரு ரவுடி என்கவுண்டர் என்ன நடந்தது?
கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது.கடலூர் சுப்பராயலு நகரை சேர்ந்தவன் வீரா. பிரபல ரவுடியான இவன் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வீரா அங்குள்ள உழவர் சந்தை அருகே ஒரு பழக்கடை நடத்தி வருகிறான். ரவுடியாக இருந்தாலும் எப்போதும் உயிர் மேல் ஒரு பயம் இருக்கும் அல்லவா? இதனால் எப்போதுமே தன்னை சுற்றிலும் ஒரு கூட்டத்தை இவன் வைத்துக் கொள்வான். வீரா எங்குச் சென்றாலும் அவனுடன் இந்தக் கூட்டமும் பாதுகாப்புக்கு செல்லும். இவனிடம் ஒரு விலையுயர்ந்த ஜீப் உள்ளது. அதில் தான் இவன் ஊரில் வலம் வருவான்.
இந்நிலையில் வீரா கும்பலுக்கும், அருகிலுள்ள குப்பன் குளம் என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற ரவுடியின் கும்பலுக்கும் இடையே பல வருடங்களாக முன்பகை இருந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணனின் உறவினரான சதீஷ் என்பவனை வீரா கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இதனால் வீரா மீது கிருஷ்ணனுக்கு பகை மேலும் அதிகரித்தது. அவனைப் பழிவாங்க சரியான நேரத்திற்காகக் கிருஷ்ணன் காத்திருந்தான். தன்னுடைய உறவினர் சதீஷை கொன்றதைப் போலவே வீராவையும் கொடூரமாகக் கொல்ல வேண்டுமென்று கிருஷ்ணன் சதித்திட்டம் தீட்டி வந்தான். கடந்த நாள் இரவில் அந்த நேரமும் கிருஷ்ணனுக்கு வாய்த்தது. அன்று இரவு சுப்பராயலு நகரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே வீரா தனியாக இருப்பதாக கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே சற்றும் தாமதிக்காமல் கிருஷ்ணன் தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு சுப்பராயலு நகருக்கு விரைந்தான்.எதிர்பார்த்தபடியே வீரா தன்னுடைய வீட்டுக்கு அருகே தனியாக நின்று கொண்டிருந்தான். செல்போனில் அவன் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த சமயத்தில் தான் கிருஷ்ணனின் கும்பல் அங்கு வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் விராவைச் சுற்றிவளைத்த அந்தக் கும்பல், அவனது முகத்தில் பிளீச்சிங் பவுடரை வீசியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத வீரா நிலை தடுமாறி கீழே விழுந்தான். உடனடியாக பாய்ந்து சென்று அவனை மடக்கிப் பிடித்த கிருஷ்ணன் கும்பல் சரமாரியாக வெட்டி வீராவின் தலையைத் துண்டித்தது. பின்னர் தலையுடன் சென்ற அந்த கும்பல் குப்பன் குளத்தில் உள்ள சதீஷின் வீட்டின் முன் தலையை வைத்துவிட்டுத் தப்பிச் சென்றது.வீரா தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிமிட நேரத்தில் கடலூர் பகுதியில் பரவியது. இதைக் கேட்ட அப்பகுதியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் கொலையாளிகளைப் பிடிக்கத் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். விடிவதற்கு முன் கொலையாளிகளைப் பிடிக்காவிட்டால் மேலும் பதற்றம் ஏற்படும் என்பதால் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர்.போலீசாரின் அதிரடி சோதனையில் பண்ருட்டி அருகே உள்ள மடப்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணன் உள்பட 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரது கும்பலில் மேலும் 7 பேர் இருந்ததால் அவர்கள் எங்கே என்ற விவரத்தைக் கேட்டபோது, தங்களது கூட்டாளிகள் அருகே உள்ள ஒரு இடத்தில் தலைமறைவாக இருப்பதாகக் கிருஷ்ணன் கூறியுள்ளான்.
இதையடுத்து கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு அவர்களைக் கைது செய்வதற்காக உதவி ஆய்வாளர் தீபன் தலைமையில் போலீசார் சென்றனர். இந்த சமயத்தில் உதவி ஆய்வாளர் திலீபனை கிருஷ்ணன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக போலீசார் கிருஷ்ணனை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் பலத்த காயமடைந்த அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது இறந்து விட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஒரே நாள் இரவில் ஒரு ரவுடி தலை துண்டித்துக் கொல்லப்பட்டது மற்றும் இன்னொரு ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டது என மறுநாள் கடலூர் ஒரு பதற்றமான விடியலைச் சந்தித்தது. கொலை மற்றும் என்கவுண்டர் நடந்த இடத்தை விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் ஆகியோர் பார்வையிட்டனர். பண்ருட்டி பகுதி மாஜிஸ்திரேட் மணிவர்மனும் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். மேலும் என்கவுண்டர் நடத்திய புதுப்பேட்டைக் காவல் உதவி ஆய்வாளர் தீபனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
வீரா தலை துண்டித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அருண்பாண்டியன், ரமணன், ராஜசேகர் மற்றும் சுதாகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே கொல்லப்பட்ட வீராவின் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.