சசிகலா: சாதிப்பாரா? சறுக்கு வாரா?

சசிகலா இன்னமும் அதிமுகவின் பலருக்கு உதறலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த நான்கெழுத்துச் சொல்.கடந்த நான்காண்டுகளில் சசிகலா மீதான அபிப்ராயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. நான்கு ஆண்டுக்காலச் சிறைவாசம் அவரது கடந்த கால வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து விட்டது.2016-ம் ஆண்டு, செப்டம்பர் 22 இரவு 9 மணிக்கு, ஜெயலலிதாவிற்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு காரணமாக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என அப்போலோ நிர்வாகம் முதலில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.ஆனால், அதற்கு முன்பே, ஜெயலலிதாவின் வீட்டில் என்ன நடந்தது, ஏன் அவர் மருத்துவமனையில் அனுமதி? என்பது குறித்து பல ஊகங்கள் உலா வந்தது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாள்களில் அவரது புகைப் படங்களை வெளியிடாததும், அமைச்சர்களின் மாறுபட்ட பேச்சுகளும் அந்த ஊகங்களை உண்மையாக்கின.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒட்டுமொத்த மக்களின் கோபமும் சசிகலாவை நோக்கித் திரும்பியது. அவர் மீதான விமர்சனங்கள் கடும் வீச்சில் இருந்தது. ஜெயலலிதாவை நாயகி என்றும் , சசிகலா வில்லி என்றும் விமர்சனங்கள் எழுந்தது. பின்னர் ஜெ. வைப்போலவே உடை மற்றும் சிகை அலங்காரத்தை சசிகலா மாட்டிக் கொண்டதும் அவரது வில்லி வேடம் கலைந்தது. கேலிக்குரிய ஒரு நபராக அவர் விமர்சிக்கப்பட்டார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரையில், சசிகலா எப்படிப்பட்ட அதிகார மையமாக இருந்தார் என்பதை அரசியல் அரங்கம் நன்கு அறிந்திருந்தது. ஆனால், வெகு ஜனங்களோ , அவர் ஜெயலலிதாவுக்குத் உதவியாளராக மட்டுமே இருந்தார் என்று நம்பிக் கொண்டிருந்தனர்.

சூட்டோடு சூடாக சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற போது மீண்டும் விமர்சனங்கள் தலைதூக்கின. சதிகாரியான வேலைக்காரி, கைநாட்டு, கொலைகாரி என பல ரக வசவுச் சொற்களுக்கு ஆளானார் சசிகலா. சில அரசியல் வி வி ஐ பி க்களும் கூட அவரை அப்படித்தான் வர்ணித்தனர். அதேசமயம் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் துவக்கிய ஓ. பன்னீர்செல்வம் பாராட்டுக்குரியவரானார். சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் பெருமளவில் பரவியது. அப்போது மட்டுமல்ல, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற போதும் முதன்மைக் குற்றவாளியான ஜெயலலிதாவைவிட அதிகமாக விமர்சனத்துக்குள்ளானது சசிகலாதான். சசிகலாதான் ஜெயலலிதாவோடு இருந்து கொண்டு கொள்ளையடித்தார் என்றும், ஜெயலலிதாவுக்குப் எதுவுமே தெரியாது என்ற ரகத்திலும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், இந்த நான்காண்டு கால சிறை வாழ்க்கை, சசிகலா மீதான எண்ணத்தை மக்களிடம் ரொம்பவே மாற்றியிருக்கிறது. தப்பு செய்தார், தண்டனையை அனுபவித்தார். இதுக்கு மேல என்ன சொல்ல? என அடித்தட்டு மக்களையும் கட்சித் தொண்டர்களையும் சொல்ல வைத்திருக்கிறது.சசிகலாவை கடுமையாக விமர்சித்த பலரும் அவரது அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னார்குடி மாஃபியா, அடாவடி கும்பல் என சசிகலா குடும்பத்தை கடுமையாக வர்ணித்தவர்களும் தற்போது, மத்திய பா.ஜ.க-வை எதிர்க்க சசிகலாவும் தேவையே என்று சொல்கிறார்கள். பா.ஜ.க-வைச் சமாளிக்க சரியான ஆள் யார் எடப்பாடியா , சசிகலாவா என டி.விக்களில் விவாதங்கள் கூட நடக்கிறது.

கொள்ளையடித்து ஜெயிலுக்குப் போனவருக்கு எதுக்கு இப்படி ஒரு வரவேற்பு ? என சில விமர்சனங்கள். அதே சமயம் அவரால் பலனடைந்தவர்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்காங்க.. இதில் நமக்கென்ன வந்தது விமர்சித்து ஒரு சில குரல்கள் எழுந்தாலும், அவரால் நன்மையை அனுபவிச்சவங்க அவங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறாங்க. இதுல நாம சொல்றதுக்கு என்ன இருக்கு என்ற சலிப்பு விமர்சனங்கள் விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், சசிகலா குறித்த மக்களின் மனமாற்றத்திற்கு இந்த சிறை வாழ்க்கை மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது. அவர் சிறைக்குச் சென்ற பிறகு அ.தி.மு.க-வில் நடந்த களேபரங்கள், ஓ.பி.எஸ்-ஸை நான்தான் தர்மயுத்தம் இருக்கச் சொன்னேன்' என அந்தக் கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் பீற்றிக் கொண்டது. அதே நபர், இ.பிஎஸ் ஓ.பி.எஸ் இருவரையும் ஆண்மை இல்லாத தலைவர்கள் என டிவிட்டரில் பதிவிட்டது, இரட்டைத் தலைமைகளின் ஆளுமையைக் கேள்விக்குள்ளாக்கியதுடன் சசிகலா தேவலையே என மக்களை யோசிக்க வைத்தது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எனச் சொல்லி விசாரணை ஆணையம் அமைக்கக் காரணமாக இருந்த ஓ.பி.எஸ்., ஒருமுறைகூட அதில் ஆஜராகாதது. சசிகலாவை ஜெயலிதாவைக் கொலை செய்தவர் என்கிற விமர்சனங்களை விலக்கி வைக்க செய்திருக்கிறது. விடுவித்தது. அது மட்டுமல்ல, பா.ஜ.க-வின் பினாமி அரசாகத்தான் தமிழகத்தில் அ.தி.மு.க-வின் அரசாங்கம் இருக்கிறது என்கிற விமர்சனங்களும் சசிகலா மீதான மக்களின் கரிசன பார்வைக்கு முக்கியக் காரணம்.

சசிகலா தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற மக்கள் தலைவராக மாறிவிட வில்லை , ஆனால், சிறை செல்லும் முன் அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள், கேலி செய்தவர்களின் தற்போதைய அவர் மீதான பார்வையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம். இந்த அரட்டல், உருட்டல்களையெல்லாம் சந்தித்துதான் வந்திருக்கிறேன் என சிறை செல்லும் முன் சசிகலா பேட்டி கொடுத்தபோதும், ஜெயலலிதாவின் சமாதியில் கையால் ஓங்கி அடித்து சத்தியம் செய்தபோதும் கேலியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், விடுதலையாகி வந்த பின்னர் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் மட்டும்தான் நான் அடிமை. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன். தொடர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் சொன்னது அவரை ஆளுமைமிக்க நபராகவே அடையாளம் காட்டுகிறது.

யார் கண்டது? நாளையே அவர் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தலைவராக உருவாகலாம். அது சாத்தியமா? இல்லையா? அவர் சாதிப்பாரா? அல்லது சறுக்கு வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News >>