திருவட்டார் : கொள்ளை போன கோயில் நகைகள் 32 ஆண்டுகளுக்கு பின் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆறரை கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இங்குச் சயன கோலத்தில் உள்ள பெருமாளின் தலையில் தங்கக் கிரீடத்தில் விலை மதிக்க முடியாத வைர, வைடூரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. பெருமாளின் உடலில் நகைகளும் தங்கத் தகட்டால் ஆன கவசமும் அணிவிக்கப்பட்டிருந்தது. பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட நகைகள் படிப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கடந்த 1989-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் இந்த கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர்.சுமார் 15 வருடங்களாகப் பூசாரிகள், தேவஸ்தான ஊழியர்களால் சுமார் 6½ கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து நாலரை கிலோ தங்கத்தை போலீசார் மீட்டனர்.
இந்த கொள்ளை தொடர்பாக குருக்கள், கோவில் ஊழியர்கள் என 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவிலில் கோர்ட்டில் 15 ஆண்டுகளாக வழக்கு நடந்து 23 பேர் தண்டனை பெற்றனர்.இதில் வழக்கில் போலீசாரால் மீட்கப்பட்ட நாலரை தங்க நகைகள் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.