நேரம் கடந்து உறங்குகிறீர்களா? இதை முயற்சித்துப் பாருங்கள்...
நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை சில உள்ளன. இப்போது அதில் படுக்கைக்குச் செல்லும் நேரமும் சேர்ந்துவிட்டது. இரவில் குறித்த நேரத்திற்குத் தூங்கச்செல்லாமல் இருப்பதும் ஓர் உரிமை, சுதந்திரம் என்பதாக இப்போது பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனநல வல்லுநர்கள் 2014ம் ஆண்டு 'bedtime procrastination' என்ற பதத்தை உருவாக்கினர். படுக்கைக்குச் செல்வதைத் தள்ளிப்போடுதல் என்று இதற்குப் பொருள்.அதிக நேரம் அலுவலகத்தில் உழைப்பவராக இருக்கட்டும்; படித்துக் களைத்துப்போன மாணவனாக இருக்கட்டும்; பிள்ளைகளைக் குறித்த கவலை கொண்ட பெற்றோராக இருக்கட்டும்; நேரமே இல்லாத தொழில்முனைவோராக இருக்கட்டும், சமூக வலைத்தளங்களில் இரவு நேரத்தை போக்குபவராகவே உள்ளனர்.
இரவு சமூக வலைத்தளங்களில் உலவும் நேரம் அனைவருக்குமே முக்கியமானதாக, விலை மதிக்க இயலாததாக உள்ளது. சமூக ஊடகத்திற்கு அடிமையாக இருப்பது, மற்ற அடிமைத்தனங்களைப் போன்றதாகவே உள்ளது.இதுபோன்று உறங்கச் செல்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பது தீவிர உடல் நலக்கோளாறுகளுக்குக் காரணமாவதுடன், குடும்பத்தில், நண்பர்களுக்கிடையே பிணக்கையும் உண்டாக்கும். இளைஞர்கள் மத்தியில் யதார்த்தமற்ற மன அழுத்தத்தை உருவாக்கிப் பல கேடுகளுக்கு இது காரணமாகிறது.
நேரத்திற்கு உறங்க என்ன செய்யலாம்?
படுக்கைக்குச் செல்லும் முன்னர், நம் முன்னோர் பாரம்பரியமாகச் செய்து வரும் சில பழக்கங்களை கடைப்பிடித்துப் பார்க்கலாம். உறங்கச் செல்லும் முன்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். படுக்கும் நேரத்திற்கு முன்பாக விளக்கு வெளிச்சத்திற்குச் செல்வதைத் தவிர்க்கலாம். படுக்கையறையில் விளக்கினை அணைத்துவிட்டு, உங்கள் கை எட்டும் தொலைவுக்கு அப்பால் ஒரு தீபத்தை அல்லது ஒரு மெழுகுவத்தியை ஏற்றி வைக்கவேண்டும். கண்களில் நீர் வரும் வரைக்கும் அதன் சுடரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். கண்களில் நீர் வந்ததும், தீபத்தை அணைக்கவும். பின்னர் இரண்டு நொடிகள் கழித்து, மீண்டும் தீபத்தை ஏற்றி, முன்புபோல உன்னிப்பாகச் சுடரைப் பார்த்துக்கொண்டே இருக்கவும். இதை மறுபடியும் மறுபடியும் செய்வது உறக்கமின்மையைப் போக்கும்; உறக்கத்தைத் தூண்டும்.தினமும் இதுபோன்று சில நிமிட நேரம் செய்யலாம். மனநல பாதிப்புள்ளவர்கள் இதைத் தவிர்க்கவேண்டும்.
தினமும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்கவும். சமூக வலைத்தளங்களுக்கு இவ்வளவுதான் நேரம் என்று குறித்து, உங்கள் பார்வையில்படும்படி மாட்டிவைக்கவும். இது உங்களுக்குப் பழக்கமாக மாறவேண்டுமானால், தொடர்ந்து 21 நாள்கள் இதைக் கைக்கொள்ளுங்கள்.சமூக வலைத்தளங்களில் அல்ல; நேரடி நண்பர்களைத் தேடுங்கள். நேரடி நட்பு எப்போதுமே கண்காணாத நட்பினை விடச் சிறந்ததாகும்.தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள் அல்லது யோகாசனம் செய்யுங்கள். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். நடைப்பயிற்சி செய்வது மனதை லகுவாக்கி, உடல் ஆற்றலைச் செலவழித்து நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.உறக்கம் முக்கியம். ஆகவே, அதைத் தியாகம் செய்து வீணாக சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவழித்து வாழ்க்கையைத் தொலைக்கக்கூடாது என்று உறுதி எடுப்பது நல்லது.