புஜாரா படைப்பாரா புதிய சாதனை? கை கொடுக்குமா சிஎஸ்கே ?

சென்னை சூப்பர் கிங்ஸ் சுருக்கமாக சிஎஸ்கே. ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே அதிரடியை தாரக மந்திரமாகக் கொண்ட அணி சிஎஸ்கே தான்.போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் ஏலத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. இந்தாண்டு ஐபிஎல்.போட்டியில் பலரது விழிகளை விரிய வைக்கும் வகையில் சில முடிவுகளை எடுத்திருக்கிறது சிஎஸ்கே.

ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்தின் மொயின் அலியை ரூ.7 கோடி ரூபாய்க்கும் , கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கும் ஏலம் எடுத்து அதிர வைத்திருக்கிறது சிஎஸ்கே.இது கூட பரவாயில்லை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முக்கிய ஆளான செடேஷ்வர் புஜாராவை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அதிர வைத்திருக்கிறது சிஎஸ்கே.

ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா எப்படி டி20 பார்மெட்டுக்கு செட் ஆவார் என ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு பஞ்சாப் அணிகளுக்காக 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடி யிருக்கிறார். மொத்தம் 30 போட்டிகளில் அவர் 390 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. ஏழு ஆண்டிற்க்கு பின்னர் சென்னை அணி மூலமாக ஐபிஎல் களத்திற்கு புஜாரா புத்துயிர் கொடுத்துள்ளார்.

புஜாரா ஒரு முழுமையான பேட்ஸ்மேன். அவரால் கிரிக்கெட்டின் அனைத்து ஷாட்டுகளையும் விளையாட முடியும். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிக்குதான் செட் ஆவார் என பிசிசிஐ ஏற்கெனவே முடிவு செய்திருக்கிறது. ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பின் அந்த இடத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து நின்று விளையாடும் திறன் படைத்த பேட்ஸ்மேனை தேடிக்கொண்டிருந்த போது அகப்பட்டவர் இந்த புஜாரா. இந்திய டெஸ்ட் அணியின் பேட்ஸ்மேனாக நங்கூரம் போட்டு தன்னுடைய இடத்தை வசப்படுத்திக்கொண்டார். அதிலிருந்தே இவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குதான் லாயக்கு என்று ரசிகர்களும் முடிவு கட்டிவிட்டனர். இந்தியாவுக்காக மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கடைசியாக அவர் 2014 ஆம் ஆண்டு அவர் விளையாடியது வங்கதேசத்துக்கு எதிராக .

அதன் பின் ஏனோ புஜாராவுக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அதனால் அவரால் திறமையையை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.வெறுமெனே பந்துகளை சகட்டுமேனிக்கு தூக்கி அடிக்கும் வீரரல்ல அவர், தனது நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் புஜாராவால் கேப்..களில் பந்துகளை பறக்கசெய்து பவுண்டரிகளை எடுக்க முடியும். அதேபோல் சிக்ஸர்களையும் அவரால் விளாச முடியும்.எந்த அடிப்படையில் என்னால் டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் விளையாட முடியும். டி20 போட்டிகளில் விளையாட முடியாது என்ற முடிவுக்கு வந்தார்களோ தெரியவில்லை. ஐபிஎல் அணிகள் எதை அடிப்படையாக வைத்து என்னை தேர்வு செய்யவில்லை என்றும் புரியவில்லை இது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் புஜாரா வேதனையுடன் சொல்லியிருந்தார்.

சமீபத்தில் கூட ஐபிஎல் தொடர்பாக பேசிய அவர் ஐபிஎல் போட்டிகளில் ஓர் அங்கமாக இருக்க நான் விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன் என்றார். அப்படி புஜாரா உறுதிபட தெரிவித்தது நிச்சயம் சிஎஸ்கே நிர்வாகத்தை கவர்ந்திருக்கும் என்றே சொல்ல தோன்றுகிறது.சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளரான பாலாஜி இது குறித்து "ஆஸ்திரேலியாவில் புஜாரா அபாரமாக ஆடினார். அதனை அவருக்கான அங்கீகாரமாகவும் அவரை கெளரவிக்கும் விதமாகவும் ஏலத்தில் எடுத்திருக்கிறோம். அவர் ஒரு உண்மையான வீரர் தனது வியர்வை மற்றும் ரத்ததை நாட்டுக்காக அர்ப்பணித்தவர் என்றார்.

ராகுல் டிராவிட் டெஸ்ட் வீரர் என அடையாளம் காணப்பட்டாலும் அவர் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத ஆளாகவே இருந்தார். அது போல டிராவிடுக்கு பதிலாக வந்த புஜாராவால் மட்டும் டி 20 போட்டியில் சாதிக்க முடியாதா என்ன? சிஎஸ்கே அவருக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் புஜாரா சாதிப்பார் என்பது நிஜம் .

More News >>