கட்சிக்கு மக்களிடம் மிக மோசமான இமேஜ் முதல்வருக்கு 10ல் 3 மார்க் கூட கொடுக்க முடியாது போட்டுத் தாக்கும் மெட்ரோ மேன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களிடையே மிக மோசமான இமேஜ் உள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு பத்தில் மூன்று மார்க் கூட கொடுக்க முடியாது என்று மெட்ரோ மேன் என அழைக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் கூறுகிறார்.கேரள தேர்தல் களம் மெதுவாகச் சூடுபிடித்து வருகிறது. கேரளாவிலுள்ள முக்கிய கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக உள்பட அனைத்துக் கட்சியினரும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, தொகுதிப் பங்கீடு உள்பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவரான மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் பாஜகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அவரும் சம்மதித்துள்ளார். இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கூறுகையில், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் விரைவில் பாஜகவில் இணைவார் என்றார்.இந்நிலையில் ஸ்ரீதரன் கூறியது: நான் பாஜகவில் சேர விரும்புகிறேன். அந்தக் கட்சி தான் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சியை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றன. நாட்டு மக்களைக் குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை வளர்ச்சித் திட்டங்களில் கூட தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று தான் அவர்கள் எண்ணுகின்றனர்.
கேரளாவில் பாஜக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். கவர்னர் பதவி எனக்குத் தேவையில்லை. அந்தப் பதவியால் மக்களுக்கு நேரடியாக எதையும் செய்ய முடியாது. முதல்வர் பதவி கிடைத்தால் நான் ஏற்றுக் கொள்வேன். கேரள மக்களுக்கு என்னால் ஆன நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கேரளாவில் மிக மோசமான இமேஜ் நிலவுகிறது. முதல்வர் பினராயி விஜயனுக்கு பத்தில் மூன்று மார்க் கூட கொடுக்க முடியாது. தற்போது கேரளாவில் ஊழல் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள ஒரு அமைச்சராலும் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலை உள்ளது. முதல்வர் பினராயி விஜயன் சர்வாதிகாரப் போக்குடன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். கேரளாவில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வருவது தான் என்னுடைய லட்சியமாகும். அதற்காகத் தான் நான் பாஜகவில் சேர தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.