பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டு எஸ்.வி.சேகர் கடிதம்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட சர்ச்சை கருத்துக்கு எஸ்.வி.சேகர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கையால் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை தீயாய் பரவியதை அடுத்து, பன்வாரிலால் பகிரங்க மன்னிப்பை கேட்டார்.
இந்நிலையில், பாஜக நிர்வாகியும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. தொடர்ந்து, அந்த பதிவை பேஸ்புக்கில் இருந்து எஸ்.வி.சேகர் நீக்கிவிட்டார். பத்திரிகை சகோதரியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறி எஸ்.வி.சேகர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். அதில், எஸ்.வி.சேகர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேணடும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அதில், “எனது நண்பர் ஒருவர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவிட்டேன். சற்று நேரத்தில் என் நண்பர் ஒருவர் படித்துவிட்டு அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னார். இதனால், அந்த பதிவை உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது. அதில் குறிப்பிட்டிருந்த பெண்களை தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், நீக்கப்பட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் அல்லது போட்டாஷாப் செய்து தொடர்ந்து இளையங்களில் போட்டு பரப்பிவிடுவதை முற்றிலுமாக நான் கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com