டின்னரில் தொல்லை.. முன்னாள் எம்பி மீது பாஜக பெண் தலைவர் புகார்..

இரவு விருந்தில் தன்னை அவமானப்படுத்தி தொல்லை கொடுத்ததாக பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மீது பாஜக பெண் தலைவர் புகார் கொடுத்துள்ளார்.டெல்லி பாஜகவில் துணைத் தலைவராக ஷாஜியா இல்மி இருக்கிறார். கடந்த பிப்.5ம் தேதி வசந்த் கன்ச் பகுதியில் உள்ள எஸ்டேட்டில் தொழிலதிபர் சேத்தன் சேத் முக்கியப் பிரமுகர்களுக்கு டின்னர் கொடுத்துள்ளார். அந்த டின்னர் பார்ட்டிக்கு ஷாஜியா போயிருக்கிறார். அந்த விருந்தில் வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் பல்வேறு தேசியக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஷாஜியா பேசிக் கொண்டிருக்கும் போது, பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. அக்பர் அகமது குறுக்கிட்டு அவருக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இது குறித்து ஷாஜியா இல்மி, போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நான் வெளிநாட்டுத் தூதர்களிடமும், தொழிலதிபர்களிடமும் பேசிக் கொண்டிருக்கும் போது அகமது குறுக்கிட்டு, பாஜகவையும், பிரதமரையும் விமர்சித்து கருத்து கூறினார். மேலும் நான் யாரிடம் பேசினாலும் அங்கு வந்து எனக்குத் தொல்லை கொடுத்தார். இரவு 9.30 மணிக்கு அவரது தொல்லை அதிகரித்ததால், நான் அழுது விட்டேன். அதன்பிறகு என்னை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர். அகமது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருக்கிறார். இதன் பேரில் அக்பர் அகமது மீது இபிகோ 506, 509 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More News >>