புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்கிறது.. கவர்னர் ஆட்சி அமலாகும்?
புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறப்படுகிறது.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 4 இடங்களில் வென்று இந்த கூட்டணி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் 7 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. மத்திய அரசு தரப்பில் பாஜகவுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏக்களை நியமித்தது.
இந்நிலையில், அரசுக்கு எதிராகச் செயல்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ தனபால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் காங்கிரசில் இருந்து பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணா ராவ், ஜான்குமார் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பலம் 14 ஆக குறைந்தது. நியமன எம்.எல்.ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உள்ளது. இதனால் சட்டசபையில் இருதரப்பிலும் சமபலத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நாளை மறுநாள்(பிப்.22) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க புதிய துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரசின் 10 எம்.எல்.ஏ.க்களும், திமுகவின் 4 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். பின்னர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், நியமன எம்.எல்.ஏ.க்களை பாஜகவினராக குறிப்பிட்டு ஆளுநர் கடிதம் அனுப்பியது மிகப்பெரிய தவறு. அவர்கள் வாக்களிக்க முடியாது என்றார்.இதற்கிடையே பாஜக மாநில தலைவர் சாமிநாதன் அளித்த பேட்டியில், காங்கிரசில் இருந்து மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு வரவுள்ளார்கள். நாங்கள் யாரையும் மிரட்டியோ, கட்டாயப்படுத்தியோ சேர்க்கவில்லை. அங்கு இருக்கப் பிடிக்காமல் அவர்கள் வருகிறார்கள் என்றார்.
தற்போதைய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி ஆட்சி தப்புவது மிகவும் கடினமானது. அதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவர் பதவி விலகக் கூடிய வாய்ப்புள்ளது. எப்படியும் வரும் 22ம் தேதிக்குப் பிறகு புதுச்சேரியில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதிலும் தெலங்கானாவில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டு, புதுச்சேரிக்கு முழுநேர துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் தெலங்கானாவுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.