உசிலம்பட்டி அருகே பெண்சிசு கொலை : பாட்டி கைது
உசிலம்பட்டி அருகே நடந்த பெண் சிசுக் கொலையில், குழந்தையின் பாட்டியே தலையணையை வைத்து அழுத்தி குழந்தையைக் கொலை செய்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதிக்கு ஏற்கனவே 5 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 12ஆம் தேதி பழனி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த போது குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததால் கொலையா எனச் சந்தேகமடைந்த போலிசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் பாட்டி நாகம்மாளிடம் போலிசார் விசாரணை நடத்தியதில் அவர் குழந்தையைத் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நாகம்மாள் பாட்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.