ஐம்பதாயிரம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்க வேண்டும் - வைகோ ஆவேசம்
ஐம்பதாயிரம் மக்கள் அந்த ஆலையை அடித்து நொறுக்க வேண்டும். அதற்காகதான் மக்கள் கூட்டத்தை சேர்க்க வந்தேன் என்று மதிமுக பொதுச் செயலாளார் வைகோ கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு பிரசாரப் பயணத்தை துவங்கியுள்ளார். கோவில்பட்டியில் இந்த பயணத்தை துவங்கிய வைகோ மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய வைகோ, “நான் சுருக்கமாக சொல்கிறேன் ஸ்டெர்லைட் ஆலையினால் நம் பிள்ளைகளுக்கு புற்றுநோய் வரும், நுரையீரல் நோய் வரும். எண்பது, தொண்ணூறு வயதுவரை வாழக்கூடியவர்கள் நாற்பது, ஐம்பது வயதிலேயே இறந்துவிடுவார்கள். முதலில் இந்த ஆலையை மஹாராஷ்டிராவில் அமைத்தனர் அங்கிருந்த விவசாயிகள் அங்கிருந்த இயந்திரங்களை அடித்து நொறுக்கினர்.
இந்த நிறுவனம் மிகப்பெரிய பணக்காரனுடையது. பின்பு தமிழ்நாட்டிற்கு வந்தான் இங்கு அப்போது அ.இ.அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது அவர்கள் அனுமதி அளித்துவிட்டனர். இந்த ஆலைத்திறந்த 22 ஆண்டுகளாக நான் போராடிவருகின்றேன். நானும் உண்ணாவிரதம், மறியல் என்று மாறி, மாறி போராட்டங்கள் நடத்தி வந்தேன். இதற்காக பல முறை கைதாகியுள்ளேன்.
ஆனால் ஒருமுறை கூட வன்முறையை கையாண்டதில்லை. நான் அதன் பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன், அதில் வெற்றிபெற்றேன். அவன் பணக்கார நிறுவனம் உடனே உச்சநீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிவிட்டான். அந்த வழக்கு மூன்றாண்டுகள் ஆனது. கடைசியில் வெற்றிபெறுவேன் என்று நினைத்தேன் ஆனால் இல்லை.
இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். நான் சொல்லும்போது அந்த மக்களுக்கு அதன் பாதிப்பு தெரியவில்லை. ஒருமுறை விஷவாயு தாக்கி அனைவரும் மயங்கி விழுந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது வைகோ சொன்னது உண்மைதான், இது ஆபத்தானது என்று உணர்ந்தனர்.
இந்த சர்க்கார் அவனுகளுக்கு ஆதரவு கொடுக்கும். இந்த ஒன்றரை மாதம் அல்லது ஒரு மாதம் போராட்டம் தணிந்த பின் இந்த அரசே அவர்களை நீதிமன்றத்தில் வழக்குப்போட வைத்து பின் அதற்கான வழிகளை மேற்கொண்டு மீண்டும் ஆலை திறக்கப்படுகிறதா இல்லையா என்று மட்டும் பாருங்கள். அதற்கு என்ன செய்யவேண்டும் ஐம்பதாயிரம் மக்கள் அந்த ஆலையை அடித்து நொறுக்க வேண்டும். அதற்காகதான் மக்கள் கூட்டத்தை சேர்க்க வந்தேன்.
நான் சொன்னேன் அவன் ஏதோ தெரியாமல் பேசிவிட்டான் விட்டுவிடுங்கள் என்று கூறினேன். இவன் கலைஞர் குடும்பத்தை பற்றி தவறாக பேசியுள்ளான் என் இரத்தம் கொதிக்கிறது தி.மு.க தொண்டர்கள் அந்த கொடும்பாவியின் உருவ பொம்மையை கொளுத்தினார்கள். கலைஞரை முப்பது ஆண்டுகள் கண்களை காக்கும் இமைபோல் காத்தேன்.
ராஜாவின் பெயரை சொல்ல எனக்கு நாக்கு கூசுகிறது. இப்படித்தான் உங்கள் கட்சியில் அரசியல் தலைவர்களை இழிவாக பேசம்படி சொல்லியிருக்கிறார்களா. "அரண்மனை நாயே அடக்கடா வாயை". நாய் என்றால் மோடியின் அரண்மனையில் உள்ள நாய், அதனால்தான் அங்கிருந்து குறைக்கிறது. நீ பெரியார் சிலையை இரவில் ஏன் உடைக்கிறாய் நேரம் சொல்லிவிட்டு வந்து உடை பார்ப்போம். நீ படையை கொண்டு வா அப்படி வந்தால் நான் வெட்டுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com