15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 74 வயது பாஸ்டர் கைது
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த 74 வயதான பாஸ்டர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கொன்னத்தடி என்ற இடத்திற்கு அருகே உள்ள முக்கடம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (74). இவர் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சர்ச்சுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி பிரார்த்தனை செய்வதற்காக அடிக்கடி வருவது உண்டு.
பல நாட்களாக அந்த சிறுமியை நோட்டமிட்டு வந்த பாஸ்டர் மேத்யூ, அந்த சிறுமியை கடந்த மாதம் ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது குறித்து அறிந்த பாஸ்டர் மேத்யூ தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கொன்னத்தடி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் மேத்யூ தலைமறைவாக இருப்பதாக பெரும்பாவூர் டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பாஸ்டர் மேத்யூவை கைது செய்தனர். இவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் அவரை கோலஞ்செரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாஸ்டர் மேத்யூவை 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் பெரும்பாவூர் சிறையில் அடைக்கப்பட்டார்.