இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எய்ம்ஸ் தலைவர் அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நோய் பரவல் சற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினமும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 13,993 பேருக்கு நோய் பரவியது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இதுவரை நோய் பரவியவர்களின் எண்ணிக்கை 1,09,91,651 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 90 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,302 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் தான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் பீதியை ஏற்படுத்தியது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்காவது நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும்.

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானதாகும். இந்த வைரஸ் பரவினால் நிலைமை மேலும் மோசமாகும். தடுப்பூசியால் இந்த வைரசை கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான். நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கும் இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உண்டு. அதுமட்டுமில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கூட இந்த வைரஸ் பரவலாம். இந்த புதிய உருமாறிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியில் மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா என்பது குறித்து வரும் நாட்களில் தான் உறுதியாக கூற முடியும். எனவே இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவது தான் தான் ஒரே தீர்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>