போலீசை சுட்டுக் கொன்ற ரவுடியை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்

கள்ளச்சாராய தொழிற்சாலையில் ரெய்டு நடத்திய போலீஸ் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்று, இன்னொரு போலீசை படுகாயப்படுத்திய ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே இன்று இந்த சம்பவம் நடந்தது. உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள காஸ்கஞ்ச் என்ற இடத்தில் கள்ளச் சாராய ஆலை இயங்கி வருவதாக உள்ளூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த ஆலையை அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மோத்தி சிங் என்பவன் நடத்தி வந்தான். இவன் மீது ஏற்கனவே ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக பலமுறை அப்பகுதியினர் புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி மோத்தி சிங் நடத்திவந்த கள்ளச்சாராய தொழிற்சாலையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். சிந்த்புரா போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது மோத்தி சிங்கின் அடியாட்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அசோக் என்ற சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார். அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்த மோத்தி சிங், தேவேந்திரா என்ற போலீஸ் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றான். இந்த சம்பவத்திற்கு பின்னர் மோத்தி சிங் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோத்தி சிங் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் இனாம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மோத்தி சிங் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காஸ்கஞ்ச் பகுதியிலேயே ஒரு இடத்தில் மோத்தி சிங் தலைமறைவாக இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சண்டையில் மோத்தி சிங்கை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

More News >>