rdquoநடிகனாக அல்லாமல் நண்பனாக கடும் கோபமாக இருக்கிறேன்rdquo - எஸ்.வி.சேகர் மீது விஷால் காட்டம்
ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன் என்று எஸ்.வீ.சேகர் பதிவுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் கையால் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை தீயாய் பரவியதை அடுத்து, பன்வாரிலால் பகிரங்க மன்னிப்பை கேட்டார்.
இந்நிலையில், பாஜக நிர்வாகியும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. தொடர்ந்து, அந்த பதிவை பேஸ்புக்கில் இருந்து எஸ்.வி.சேகர் நீக்கிவிட்டார். பத்திரிகை சகோதரியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறி எஸ்.வி.சேகர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன் என்று பெண் ஊடகவியலாளர்கள் குறித்து கருத்துக் கூறிய நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நனவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
பத்திரிகைத்துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன். ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com