மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு பூனாவில் பள்ளிகள் மூடப்பட்டன இரவு நேர ஊரடங்கு அமல்

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து வரும் 28ம் தேதி வரை பூனாவில் பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நோய் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,264 பேருக்கு நோய் பரவியது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது நோயாளிகள் எண்ணிக்கையில் 74 சதவீதம் பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

பூனாவில் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் வரும் 28ம் தேதி வரை அந்த மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More News >>