இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 10 லட்சமானது.. சிகிச்சையில் ஒன்றரை லட்சம் பேர்..
இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. நேற்று(பிப்.21) ஒரே நாளில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதையடுத்து, இது வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 5850 ஆக உயர்ந்தது. இதில் ஒரு கோடியே 6 லட்சத்து 99,410 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 50,055 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 56,385 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவிய இந்த வைரஸ் நோய், ஆரம்பத்தில் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்குப் பாதித்தது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை.தமிழக அரசு நேற்று(பிப்.19) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 52 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 452 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 48,275 ஆக உயர்ந்தது.
மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 460 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 31,206 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 3 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,460 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4147 ஆகக் குறைந்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் நீடிக்கிறது. சென்னையில் நேற்று புதிதாக 154 பேருக்கும், கோவையில் 45 பேர், செங்கல்பட்டில் 40 பேருக்கும், திருவள்ளூரில் 30 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 20க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.