மருத்துவமனை லிப்ட் திடீரென விழுந்தது.. முன்னாள் முதல்வர் கமல்நாத் தப்பினார்..
இந்தூர் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் திடீரென 10 அடிக்கு டமார் என விழுந்தது. இதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தப்பினர்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர் ராமேஸ்வர் படேல். அவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக இந்தூரில் உள்ள டிஎன்ஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் முதல்வர் கமல்நாத், ஜித்து பட்வாரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நேற்றிரவு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அவர்கள் மருத்துவமனையில் 3வது தளத்தில் இருந்த ராமேஸ்வர் படேல் வார்டுக்கு செல்வதற்காக லிப்டில் ஏறினர். லிப்ட் 10 அடிக்கு மேலே சென்றதும் திடீரென கீழே விழுந்தது. டமார் என பெரும் சத்தத்துடன் லிப்ட் விழவும், கமல்நாத்தின் பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். அப்போது லிப்ட்டில் கதவைத் திறக்க முடியாத அளவுக்குச் சிக்கிக் கொண்டிருந்தது. அதன்பிறகு லிப்ட் இன்ஜினியர்கள் ஓடோடி வந்து, கதவை அகற்றி அனைவரையும் மீட்டனர். இதில் கமல்நாத் உள்ளிட்டோருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. லிப்ட் விபத்தில் கமல்நாத் உயிர் தப்பியது குறித்து முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே கமல்நாத்துக்கு போன் செய்து விசாரித்தார். பின்னர், லிப்ட் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.விபத்து குறித்து மருத்துவமனை இயக்குனர் கூறுகையில், லிப்ட் அதிக சுமை தாங்காமல் பழுது ஏற்பட்டு விழுந்துள்ளது என்றார்.