அஜீத் ரசிகர்களை தாஜா செய்ய டெக்னிக்.. வலிமைக்குப் பதில் பில்லா ரீ ரிலீஸ்..
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை, எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நெட்டில் மெஸேஜ்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்கும் நிலையில் அங்கு வந்த ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடம் அப்டேட் கேட்டு அவர்களைத் திணறடித்தனர்.அண்மையில் ஒரு வைரல் வீடியோவில், முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் கூச்சலிடுவதைக் காண முடிந்தது.
இதையறிந்த ரசிகர்களுக்குச் செல்லமாகக் கண்டிப்பு தெரிவித்திருந்தார் அஜீத். பொது வெளியில் பண்பாக நடந்துகொள்ள வேண்டும் யாரையும் தர்ம சங்கடத்திற்குள்ளாக்க கூடாது வலிமை பட அப்டேட் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.இந்நிலையில் சென்னையில் தனது ரசிகர்களுடன் அஜீத்தின் போஸ் தந்த சமீபத்திய படங்கள் நெட்டில் வைரலானது.முன்னதாக அஜித் தனது பைக்கர் நண்பர்களுடன் சாலைப் பயணம் மேற் கொண்டார். சாலைப் பயணத்தின் சில படங்கள் சமூக ஊடகங்களிலும் வெளிவந்தன.
இந்த மறக்க முடியாத பயணத்தில் நடிகர் தனது குழுவுடன் சேர்ந்து 10,000 கி.மீ.பயணம் செய்து சாதனை படைத்தார். இதுபோன்ற தகவல்களை ரசிகர்கள் வைரலாக்கினாலும் வலிமை அப்டேட் கேட்பதை மட்டும் ரசிகர்கள் நிறுத்தவில்லை.அஜீத் படம் திரைக்கு வந்து வருடக்கணக்கில் ஆகிவிட்டதால் அவரது ரசிகர்களைச் சமாதானப்படுத்த அஜீத் நடித்த பில்லா படத்தை ரீரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். வரும் மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பில்லா ரீரிலீஸ் ஆகிறது.இப்படத்தில் நயன்தாரா. நமீதா, பிரபு, ரஹ்மான் போன்றவர்கள் நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் டைரக்டு செய்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.வலிமை அப்டேட் பற்றிய பிரச்சனையைச் சமாளிக்க பில்லா ரீரிலீஸ் கைகொடுக்குமா என்பது சந்தேகமே.