கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரள எல்லைகளை மூடியது கர்நாடகா

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி கேரள, கர்நாடக மாநில எல்லையில் உள்ள பெரும்பாலான சாலைகளைக் கர்நாடக அரசு மூடியுள்ளது.இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 14,199 பேருக்கு நோய் பரவியது தெரியவந்துள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 83 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,385 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த 5 மாவட்டங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பூனாவில் வரும் 28ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கேரளாவில் நோய் பரவல் அதிகரித்திருப்பதால் அங்கிருந்து தங்களது மாநிலத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க கர்நாடக அரசு தீர்மானித்தது. இதன்படி கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் கேரள, கர்நாடக எல்லையில் உள்ள 10க்கும் மேற்பட்ட சாலைகளைக் கர்நாடக அரசு மூடி உள்ளது. மேலும் பல எல்லைகளில் கேரளாவிலிருந்து வருபவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சரக்கு வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல சோதனைச் சாவடிகளில் மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

More News >>