கேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் உள்படச் சுகாதாரத் துறை ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் நோய்த் தடுப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறை உள்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படி அதிகமாக யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள மாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மோகன். இவரது மகள் மிதா மோகன் (24). இவர் கண்ணூர் மாவட்டம் பரியாரம் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பல் மருத்துவம் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதன் பின்னர் அவருக்குத் தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டது. இவருடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட மேலும் சிலருக்கும் இதே போலத் தலைவலி மற்றும் வாந்தி இருந்தது. இது குணமாகாததால் மிதா மோகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா பரவியது தெரியவந்தது.இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மிதா மோகன் பரிதாபமாக இறந்தார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட போதும் டாக்டர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் தங்களது மகளின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.