பாஜக, அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். நாராயணசாமி பேட்டி..
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்த பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளுக்கு புதுச்சேரி மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று(பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் முதல்வர் நாராயணசாமி பேசி முடித்ததும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி மற்றும் பாஜக நியமன உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதால் வாக்குரிமை உள்ளது என்று வாக்குவாதம் செய்தனர்.
இதன்பின், முதல்வர் நாராயணசாமி தீர்மானத்தை முன்மொழிந்து விட்டு, அமைச்சர்களுடன் வெளியேறினார். முதல்வரின் நம்பிக்கை தீர்மானம் பெரும்பான்மை இல்லாததால், தோல்வியுற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, நாராயணசாமி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து ராஜினாமா செய்தார்.
இதன்பின், நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து எனது தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்துள்ளனர். இதை செய்த மத்திய பாஜக அரசுக்கும், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகளுக்கும் புதுச்சேரி மக்கள் வரும் சட்டசபைத் தேர்தலில் தக்க தண்டனை அளிப்பார்கள். பெரும்பான்மை இழந்ததை அடுத்து நாங்கள் ராஜினாமா செய்துள்ளோம். இனிமேல் என்ன செய்வது என்று ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.