மாவில் எச்சில் துப்பி தந்தூரி ரொட்டி சுட்ட சமையல்காரன் கைது..
திருமண மண்டபத்தில் ரொட்டி சுடும் போது மாவில் சமையல்காரன் எச்சில் துப்பிய காட்சி வீடியோ, வைரலாக பரவியது. இதையடுத்து, அந்த சமையல்காரன் கைது செய்யப்பட்டான்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் இந்த அருவருப்பான சம்பவம் நடந்துள்ளது. மீரட் நகரில் ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த மண்டப வளாகத்தில் திறந்தவெளியில் சமையல் நடைபெற்றிருக்கிறது.
அப்போது, தந்தூரி ரொட்டி சுட்ட ஒரு சமையல்கார வாலிபர், மாவு பிசைந்து தேய்த்ததும் அதில் எச்சில் துப்பி பின்னர் ரொட்டி சுட்டிருக்கிறார். அதை யாரோ வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு விட்டார்.இந்த காட்சி வைரலாக பரவியதும், இந்து ஜக்ரான் மஞ்ச் சங்கத்தினர் அந்த பகுதி காவல் நிலையத்திற்குச் சென்று அந்த சமையல்காரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீசார் அந்த திருமண மண்டபத்தில் விசாரணை நடத்தியதில் அந்த சமையல்கார வாலிபர் அதே ஊரைச் சேர்ந்த சோகைல் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இது பற்றி இந்து ஜக்ரான் மஞ்ச் சங்கத்தின் நிர்வாகி சச்சின் சிரோகி கூறுகையில், திருமண மண்டபங்களில் சமையல் கூடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அதைக் கட்டாய விதியாகக் கொண்டு வந்தால்தான் இது போன்ற அருவருப்பான சம்பவங்கள் நடைபெறாது என்றார்.