திருமண வீட்டில் விருந்து பரிமாறும் போது மோதல் இரு வீட்டினரும் மாறி மாறி தாக்குதல் மணமக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
திருமணம் முடிந்த பின்னர் விருந்து பரிமாறும் போது ஏற்பட்ட தகராறில் இரு வீட்டினரும் சரமாரி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வந்த பின்னர் தான் இந்த தகராறு தீர்ந்தது. தங்களது வீட்டினர் தகராறில் ஈடுபட்ட போதிலும் மணமக்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். நெல்லை மாவட்ட எல்லையிலுள்ள ஆரியங்காவில் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது ஆரியங்காவு என்ற கிராமம். இது நெல்லை மாவட்ட எல்லையில் உள்ளது.
இந்த பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும், திருவனந்தபுரம் அருகே உள்ள கடைக்கல் என்ற இடத்தை சேர்ந்த வினோத் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று ஆரியங்காவில் உள்ள பெண்ணின் வீட்டில் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்பகுதியில் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி திருமணம் நடத்தப்பட்டது.தாலி கட்டும் சடங்கு முடிந்தவுடன் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.
அந்த திருமணத்திற்கு மணமகன் வீட்டைச் சேர்ந்த சிலர் குடிபோதையில் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் விருந்து பரிமாறும் போது தகராறில் ஈடுபட்டனர். குழம்பில் உப்பு கூடுதலாக இருப்பதாகக் கூறி அவர்கள் தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் இது பயங்கர மோதலாக மாறியது. இரு வீட்டினரும் சரமாரியாக ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் இரண்டு பேருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. மணமகனும், மணமகளும் சேர்ந்து தங்களது உறவினர்களை மோதலில் இருந்து விலக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. இது குறித்து ஆரியங்காவு போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்ற பின்னர் தான் மோதல் முடிவுக்கு வந்தது. இது தொடர்பாகக் குடிபோதையில் திருமணத்திற்கு வந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்களது உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போதிலும் மணமக்களிடையே எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய கணவனின் வீட்டுக்கு ரம்யா புறப்பட்டுச் சென்றார்.