வயநாட்டில் டிராக்டர் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி

இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக உலக நாடுகள் வேதனைப்படுகின்றன. ஆனால் அந்த வேதனை பிரதமர் மோடிக்குத் தெரியவில்லை என்று வயநாட்டில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டிராக்டர் பேரணி நடத்திய ராகுல் காந்தி பேசினார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். இன்று அவர் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கு விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த டிராக்டர் பேரணியிலும் அவர் கலந்து கொண்டார். சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் டிராக்டர் ஓட்டிச் சென்றார். இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கலந்து கொண்டன. பேரணியின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் பேசியது: இந்திய விவசாயிகளின் போராட்டத்தை உலகமே உற்று நோக்குகிறது. இந்திய விவசாயிகளின் வேதனை உலக நாடுகளுக்குத் தெரிகிறது. ஆனால் நம்முடைய பிரதமர் மோடிக்கு மட்டும் நம் விவசாயிகள் வேதனை தெரியவில்லை.

இந்திய விவசாயிகளின் துன்பங்கள் குறித்து 'பாப்' நட்சத்திரங்கள் முதல் பல முக்கிய பிரபலங்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பல லட்சம் பேரின் வயிற்றுப் பிழைப்பான விவசாயத்தை அவர்களிடம் இருந்து பறித்து தன்னுடைய சில நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது தான் மோடியின் திட்டமாகும். புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் பெரிய முதலாளிகள் தீர்மானிக்கின்ற மலிவு விலைக்கு விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு ஏழை விவசாயிகள் தள்ளப்படுவார்கள். விவசாயிகளின் போராட்டத்திற்குக் கடைசி வரை காங்கிரஸ் துணையாக இருக்கும். நாம் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே விவசாயிகளைப் பாதிக்கும் இந்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு முன்வரும். இவ்வாறு அவர் பேசினார்.

More News >>