நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ: விஜய் ஹசாரே பேட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி ஸ்ரீசாந்த் அதிரடி!
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கேரள வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 20-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உத்தரப்பிரதேசம் - கேரள அணிகள் மோதின. போட்டியில் முதலில் விளையாடிய உத்தரப்பிரதேச அணி 283 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர்.
உத்தரப் பிரதேச அணி சார்பில் விளையாடிய அபிஷேக் கோஸ்வாமி, பிரியம் கர்க், அக்சதீப் நாத் ஆகியோர் அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடினர். இருப்பினும், கேரள அணியின் பந்து வீச்சும் தீ-யாகத்தான் இருந்தது. குறிப்பாக, கேரள அணி வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 65 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், 5 விக்கெட்களை வீழ்ச்சி அதிரடி காட்டியுள்ளார்.
ஐபிஎல் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் கேரள மாநிலத்துக்காக அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டக் அலி கோப்பையில் பங்கேற்று விளையாடினார். மேலும், 18 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இருப்பினும், நடப்பு 2021 ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஸ்ரீசாந்த் பதிவு செய்திருந்தார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில், 8 ஐபிஎல் அணிகளில் உரிமையாளர்களும் நல்ல வீரரை இழந்துவிட்டோம் என்று வருந்தும் அளவிற்கு விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி ஸ்ரீசாந்த் அதிரடி காட்டியுள்ளார்.