பாண்டிச்சேரி அரசு பணால்: பாஜக தான் காரணமா?

எதிர்பார்த்தபடி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார். பாண்டிச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் என்பதற்கான அறிகுறிகள் கடந்த வாரம் முதலே தென்பட்டன. அடுத்தடுத்து 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் கூட்டணிக் கட்சியான திமுக வில் இருந்து ஒருவர் ராஜினாமா செய்ய கிட்டத்தட்ட ஆட்சி கவிழ்ந்தது அப்போதே ஊர்ஜிதமானது. இது ஜனநாயக படுகொலை இதற்கு பாரதிய ஜனதா தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழிசை யைப் பொறுப்பு கவர்னராக நியமித்தது முதலே பாஜக தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டது என்கிறார்கள் சில அரசியல் பிரமுகர்கள். இல்லை இல்லை அதற்கு முன்பே பாஜக காயை நகர்த்த துவங்கி விட்டது என்கிறார்கள் இன்னொரு தரப்பினர். காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த 2 எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தை இதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள் அவர்கள். ஆனால் பாஜக தரப்பிலோ இதில் எங்கள் பங்கு எதுவுமே இல்லை. எல்லாம் தானாக நடக்கிற விஷயம் நாங்கள் செய்வதாக இருந்தால் எப்போதோ செய்திருப்போமே ஆட்சி முடியப்போகும் நேரத்திலா செய்வோம் என்று எதிர்பாட்டு பாடுகிறார்கள். இந்த அரசியல் சதுரங்கத்தில் பெரிய டிவிஸ்ட் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளதுதான்.

இவர் எதற்காக எப்படி ராஜினமா செய்தார் இன்று பலரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. இவரை ராஜினாமா செய்ய வைத்து வளைத்துப் போட்டிருக்கிறது பிஜேபி என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வெங்கடேசனின் மௌனமும் அதை ஊர்ஜிதமாகிறது. கட்சி தலைமையிடம் சொல்லிவிட்டு தான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தேன் என்று அடித்துச் சொன்ன வெங்கடேசன் தற்போது கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்து தான் பின்னணியில் யார் இருக்கிறார்கள் இருந்தார்கள் என்பது தெரியவரும். ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்தால் பூனைக்குட்டி வெளியே வந்து விடும்.

More News >>