பழுதான விமானத்தை பத்திரமாக இறக்கிய ஹீரோயின்

சௌத்வெஸ்ட் 1380 - அந்த போயிங் 737 ரக விமானம் 32,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திடீரென்று ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம்! அதைத் தொடர்ந்து விமானம் குலுங்கியது! பயணியரின் அவல குரல்!

பணியாளர்களையும் சேர்த்து மொத்தம் 149 பேர் பறந்து கொண்டிருக்கின்றனர். அத்தனை பேரின் உயிருக்கும் அவர் ஒருவரே பொறுப்பு. அந்த விமானி கொடுக்கும் அவசர கால அறிவிப்புகள் எதுவும் பயணிகள் காதில் விழவில்லை. விமானம் முழுவதும் பதற்றத்தில் இருந்தது.

“ஐயோ, ஜன்னல் உடைந்து விட்டது. ஒரு பெண் வெளியே விழுந்து விட்டார்..." - விமானிகளின் அறைக்கு வந்த செய்தியை நம்ப முடியவில்லை. அந்தச் செய்தியை தரை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தபோது, அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து டாலஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தின் அருகில் இருந்தது பிலடெல்பியா விமான நிலையம். அங்கு விமானத்தை இறக்கிவிட முடிவெடுத்தார் அந்த விமானி. ஆனால், முடியுமா? எஞ்ஜினின் ஒரு பகுதி உடைந்து விழுந்த நிலையில், ஒரு ஜன்னல் உடைந்து, விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் தாறுமாறாக இருக்கின்ற நேரத்தில் விமானத்தை பத்திரமாக இறக்குவது முடிகிற காரியமா? தைரியமாக, நிதானமாக விமானத்தை இறக்கி உலக மக்கள் மனதில் ஹீரோயினாக இடம் பிடித்துள்ளார் டாமி ஜோ ஷல்ட்ஸ்.

விமானத்தில் பயணித்த ஜெனிஃபர் ரியோர்ட்சன் உயிரிழந்த நிலையில், காயமுற்ற ஏழு பேருடன் 148 உயிர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், "நாங்கள் எங்கள் வேலையை மட்டுமே செய்தோம். கனத்த இதயத்தோடு இதை பதிவு செய்கிறோம். ஒரு குடும்பத்தின் இழப்பின் துயரை பிரதிபலிக்கும் இந்த நேரத்தில் முழு ஆதரவை அளித்த பொதுமக்களுக்கும், உடன் பணியாளர்களுக்கும் விமான பணியாளர் குழுவின் சார்பாக பாராட்டுதல்கள் உரித்தாகுக" என்று விமானத்தின் பர்ஸ்ட் ஆபீஸர் டாரென் எல்லிஸாருடன் இணைந்து தங்கள் விமான நிறுவனத்தின் சமூகவலைத்தளத்தில் ஷல்ட்ஸ் பதிவிட்டுள்ளார்.

தற்போது 56 வயதாகும் ஷல்ட்ஸ், கன்சாஸ், ஓலத்திலுள்ள மிட்அமெரிக்கன் நசரேன் பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு உயிரியல் மற்றும் வேளாண்வணிகத்தில் பட்டம் பெற்றவர். அமெரிக்க கப்பற்படையின் முதல் பெண்விமானிகளுள் ஒருவராக பணியாற்றியவர். இவரது கணவரும் சௌத்வெஸ்ட் நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>