இராமேஸ்வரம் கோயிலில் காஞ்சி விஜயேந்திரருக்கு அனுமதி மறுப்பு
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடும் வாக்குவாதத்திற்கு பின்னர் அவர் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார் இதனால் கோவிலில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சி விஜயேந்திரர் கடந்த இரு தினங்களுக்கு முன் இராமேஸ்வரம் வந்திருந்தார். காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் ஈடுபட்ட அவர் இன்று காலை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார்.
அப்போது அவர் பூர்ண கும்ப மரியாதையுடன் அவர் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். சுவாமி சன்னதிக்கு சென்ற விஜயேந்திரர், அங்கு சுவாமிக்கு பூஜை செய்யவேண்டி கருவறைக்கு செல்ல முயன்றார். அப்போது ஏற்கனவே கருவறைக்குள் இருந்த பாரம்பரிய மஹாராஷ்டிர பிராமணர்கள் அவரை தடுத்தனர். அவரை கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தனர். இதன் காரணமாக தமிழ் பிராமணர்களுக்கும் மஹாரஷ்டிர பிராமணர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனால், அங்கிருந்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. ஹெச்.ராஜா ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விஜயேந்திரரை கருவறைக்குள் அனுமதிக்க வைத்தனர். இதைத்தொடர்ந்து கருவறைக்குள் சென்ற விஜயேந்திரர், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்தார். பாரம்பரியத்தை காப்பதற்காக சுவாமி சன்னதி முன் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட சம்பவம் அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ஏற்கனவே சங்கரராமன் கொலை வழக்கில் சிறைக்கு சென்று விடுதலை ஆனவர் என்பதும், அதற்கு பிறகு காஞ்சி மடம் பழைய புகழை இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.