இந்தியா, குற்றங்களின் கூடாரமா? - மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி
முற்போக்கு சிந்தனையாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி, பூனாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே, 2015 பிப்ரவரி 16-ம் தேதி கோலாப்பூரில் சுடப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பின் மரணமடைந்தார். தபோல்கரின் வழக்கை சி.பி.ஐயும், பன்சாரேயின் வழக்கை கோலாப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் தலைமையிலான குழுவும் விசாரித்து வருகின்றன.
இந்தக் கொலை விசாரணைகளை குறித்த பல மனுக்களை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாத்திகரி மற்றும் பாரதி டாங்ரே ஆகியோரை கொண்ட அமர்வு வியாழன் அன்று விசாரித்தது. அப்போது, ‘‘பன்சாரே கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வடகிழக்கு மாநிலத்தில் நடமாடுவதாக தகவல் கிடைத்தும், இந்த இரண்டு கொலைகளின் விசாரணையும் முட்டுச்சந்தில் நிற்கின்றன,” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், "இந்தியா, குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரம் மட்டுமே நிறைந்த நாடாக தோற்றமளிக்கிறது," என்றும் கூறினர்.
“இன்றைக்கு வெளியுலகிலிருந்து நமது கல்வி மற்றும் கலாசார அமைப்பில் இணைந்திட யாரும் விரும்பவில்லை. நாம் இதேபோன்று தனித்த கூட்டுக்குள்தான் வாழப்போகிறோமா?" என்று கேள்வி எழுப்பினர்.
"குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விட காவல்துறையினர் புத்திசாலித்தனமாக செயல்படாவிட்டால், வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இருக்காது," என்று கூறிய நீதிபதிகள், "இவ்வழக்கு ஜூன் 28-ம் தேதி மறுபடியும் விசாரணைக்கு வருவதற்கு முன்பு, விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சி.பி.ஐ. மற்றும் மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வேண்டியது வரும்," என்றும் எச்சரித்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com