தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அறிவிப்பு மார்ச் 7ல் வெளியாகும்.. பிரதமர் சூசக தகவல்..

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பை மார்ச் 7ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அரசியல்கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டுமெனக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதே போல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று(பிப்.22) அசாமில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் அசாம் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களைக் குறிப்பிட்டார். மேலும், அவர் கூறுகையில், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்களாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மே மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2016ம் ஆண்டில் மாநிலச் சட்டசபைத் தேர்தல்களை மார்ச் 4ம் தேதி வெளியிட்டது. இந்த முறை அனேகமாக மார்ச் 7ம் தேதி தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார். மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி, கொல்கத்தாவுக்கு சென்று மிகப் பெரிய பேரணியில் பங்கேற்கவுள்ளார். அது முடிந்த பின்பு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

More News >>