வெற்றிநடை போடும் தமிழகமா.. தள்ளாடும் தமிழகமா.. பிடிஆர் தியாகராஜன் கடும்தாக்கு..
அதிமுக அரசின் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற கோஷம் ஒரு ஏமாற்று வேலை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.மதுரை சட்டமன்ற உறுப்பினரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி வருமாறு:அதிமுக அரசு தற்போது வெற்றிநடை போடும் தமிழகம் என்று தீவிரமாக விளம்பரம் செய்து வருகிறது. இது ஒரு ஏமாற்று வேலை. அப்படி விளம்பரம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. காரணம், தமிழக அரசின் தொடர் வருவாய் பற்றாக்குறை என்பது ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
நாட்டிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குப் பற்றாக்குறை மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.இப்படியிருக்கும் போது, அதிமுகவினர் என்ன அடிப்படையில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக சொல்கிறார்கள்? திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது, 2006- 2011ம் ஆண்டில் தமிழக அரசின் உபரி வருவாய் ரூ.2,386 கோடியாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் ரூ.17,057 கோடி வருவாய் பற்றாக்குறை மாநிலமாகத் தமிழ்நாடு மாறியது. இப்போது இன்னும் மோசமான நிலைமைக்குச் சென்று விட்டது.
இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஏதோ தமிழ்நாடு வேகமாக முன்னேறிச் செல்வது போல் பேசுகிறார்கள். இது மக்களுக்கு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள், கனிமச் சுரங்கங்கள் மூலமாக நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் நிறையக் கனிம வளம் இருந்தும், டாமின்(தமிழ்நாடு கனிம நிறுவனம்) மூலமாக ரூ.900 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் மோசமான நிதிநிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மாநில வருவாய் மிகவும் குறைந்து கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 15வது நிதிக் குழு அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் ஆதாரத்துடன் குறிப்பிடுகிறேன். தமிழ்நாட்டின் கடன் ரூ.5 லட்சம் கோடியை எட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், ஆட்சியில் தலைமை சரியில்லை, ஆளுமைமிக்கவர் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.