பிளஸ் 2 மாணவி குத்திக் கொலை... தேடப்பட்டு வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மூணாறு அருகே பிளஸ்டூ மாணவி குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள வண்டித்தரை என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஜெஸி. இவர்களது மகள் ரேஷ்மா (17). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற இவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராஜேஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ரேஷ்மாவை அவரது தந்தை ராஜேஷின் பெரியப்பா மகனான அருண் (28) என்பவர் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரும் நடந்து செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மனைவி ரேஷ்மாவின் உடல் அங்குள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உடலுக்கு அருகே அருணின் செல்போன் மற்றும் செருப்பு கிடந்தது. இதையடுத்து மாணவி ரேஷ்மாவை அருண் தான் கொலை செய்திருக்கலாம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து கடந்த 4 நாட்களாக அருணை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே அருணின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், அவர் கொலைக்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. தன்னுடைய நண்பர்களுக்கு அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், தான் ரேஷ்மாவை தீவிரமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் தன்னை ஏமாற்றி வேறு ஒரு வாலிபருடன் அவர் நெருக்கமாக இருப்பது தெரியவந்ததால் ரேஷமாவை கொலை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ரேஷ்மா கொன்ற பின்னர் தன்னை வேறு யாராலும் பார்க்க முடியாது என்றும் அதில் எழுதியிருந்தார். எனவே ரேஷ்மாவை கொலை செய்த பின்னர் அருண் தற்கொலை செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இந்நிலையில் கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இன்று காலை அருண் மரத்தில் தூக்குபோட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அருணின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.