பெங்களூரு அருகே சுரங்கத்தில் வெடிவிபத்து: உயிர் பலி அச்சம்
கர்நாடக மாநிலத்தில் கல் குவாரி ஒன்றில் நடந்த வெடி விபத்தில் நான்கு பேருக்கும் மேலாக உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குவாரிகளில் சோதனை நடக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஜெலட்டின் குச்சிகளை இடம் மாற்றியபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.கர்நாடகாவில் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஹிரேனாஹவள்ளி. இது பெங்களூருவிலிருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள கல் குவாரிகளில் சட்டவிரோதமான வெடி பொருள்கள் இருக்கின்றனவா என்று அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல் பரவியதையடுத்து,ஜெலட்டின் குச்சிகளை இடமாற்றம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. வெடிபொருள்களைக் கையாளும் பயிற்சி இல்லாதவர்கள் இப்பணியைச் செய்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தை பார்வையிட்ட மாநில சுகாதார அமைச்சர் கே. சுதாகர், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை மாநில அரசு தடுக்காது என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தைக் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக மாநில சுரங்கத் துறை அமைச்சர் முருகேஷ் ஆர். நிராணி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஷிவமோகா மாவட்டத்தில் கடந்த ஜனவரி 21ம் தேதி இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.