எல்லையில் தொல்லை கொடுக்கும் கர்நாடகா மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கேரள எல்லையைக் கர்நாடக அரசு மூடியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருப்பதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.இந்தியாவில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே சராசரியாக 4,500க்கும் மேற்பட்டோருக்குத் தினசரி நோய்ப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து சாலை, ரயில் மற்றும் விமானங்கள் மூலம் வருபவர்கள் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டி பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்த இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று திடீரென கேரள எல்லைகளைக் கர்நாடக அரசு மூடியது. கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல எல்லைகளில் 15க்கும் மேற்பட்ட ரோடுகள் உள்ளன. இதில் 13 ரோடுகளை கர்நாடக அரசு திடீரென மூடியது. இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகா செல்பவர்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் எல்லையில் கடும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். கேரளாவிலிருந்து செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்குக் கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கொரோனா நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட போது மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி கர்நாடக அரசு நடந்து கொண்டுள்ளது. எனவே இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறினார்.