தமிழக அரசின் நிதி நிலை சீராக இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்: நிதித்துறை செயலாளர் தகவல்
அடுத்து எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலையை சீரமைக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின்னர் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது: தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும்.கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழக அரசு மீறவில்லை.
அதே சமயம் தமிழகத்தின் வருவாய் 18 சதவீதம் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 2.02 சதவீதமாக இருக்கும்.2020-21 ஆண்டில் டாஸ்மாக் மூலம் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.அடுத்த நிதியாண்டில் தமிழக அரசு வாங்கும் கடன் அளவு குறையும்.தேசிய அளவில் 7% பொருளாதார வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.